இயற்கை முறைக் கல்வி

Thursday, April 4, 2013

தாளாண்மை - பாலாஜி ஷங்கர்

நவீன மனிதனுக்குத் தன் அறிவாற்றலின் மேல் அளவற்ற தன்னம்பிக்கை உருவாகி விட்டது. இயற்கையை அடக்கி ஐம்பூதங்களையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்து அகலில் அகலும், அணுவில் அணுவும் தன் விரலசைப்பிற்கு ஆடச்செய்யக்கூடிய‌ ஆற்றலுடன் தான் இருப்பதாய் எண்ணுகிறான். பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் புத்தம் புதிய கலைகள் ,மெத்த அல்ல மிக விரைவாகவே, கிழக்கும், மேற்கும் எங்கும் வளர்கின்றன. அவசியத்திற்குத் தோன்றிய விஞ்ஞானம் இன்று மனிதனின் ஆளுமைப் பசிக்கும், ஆணவத்திற்கும் தீனியிடும் வியாபாரக் கருவி ஆகி விட்டது. "Appetite grows by what it feeds on" என்று ஷேக்ஸ்பியர் எழுதியது போல், ஆளுமை ருசியானது ஒரு யானைத் தீ நோய்போல் உண்ண உண்ணத் தீனி கேட்டுக்கொண்டே இருக்கிறது.பண வசதி என்பது சந்தையின்மேல் நமக்குள்ள ஆளுமையைப் பறைசாற்றுவதால், நுகர்ச்சி என்பது நாகரீகம் ஆகி விட்டது.  வரையறுக்கப்பட்ட வளங்கள் உள்ள‌ இப்புவியில், வரையற்ற நுகர்ச்சி எங்ஙனம் சாத்தியம் என்ற கேள்விக்கு யாரும் விடை சொல்ல விரும்பவில்லை. ஆற்றலுக்கு அணு உலையும், சிந்தை மகிழக் கணினியும், வலைப்பூக்களும், தகவல் பரிமாற விண்கோள்களும், புதுப்புது நோய்களுக்குப் புதுப்புது வேதி விடைகளும் எல்லாம் கண்ட விஞ்ஞானம் ஒன்றை மட்டும் வெல்ல இயலவில்லை - அதுதான் உணவு.


ஒரு உயிரைத் தின்றுதான் இன்னொரு உயிர் வாழ இயலும் என்பது இயற்கையின் விதி. என‌வே எவ்வளவுதான் விஞ்ஞானம் அகோவென்று வளர்ந்தாலும், புவியில் அனைத்துயிர்களையும் ஒரு அடி மேல்மண்தான் காக்கிறது. உணவு என்பது இயற்கையின் படைப்பு -மனிதனால் செயற்கையாய்ப் படைக்கவே இயலாதது. இதிலும், தன் அடிப்படை ஆணவத்தைக் கைவிட இயலாத விஞ்ஞானம்,  இயற்கையுடன் இணைந்து அதைக் குறைந்த அளவு பாழ்படுத்தித் தனக்குத் தேவையானதைப் பெறுவதை விட்டு, விவசாயத் தொழில்நுட்பம் என்ற பெயரில் இயற்கைச் சுழற்சிகளை மதிக்காமல் உயர் விளைச்சல் என்ற பெயரில் அழிவையே விளைத்து வருகிறது. மரக்கலப்பை, ஏற்றம், ஏர்மாடு, இல்லத்தே உள்ள வித்து என்றிருந்த பண்டைய மரபு வேளாண்மையும் ஒரு விஞ்ஞானம்தான் என்றாலும் அது ஆணவம் அற்ற, ஒரு தொடர் பரிசோதனையால் பரிணாம வளர்ச்சி அடைந்த, அனுபவத்தாற் கனிந்த,  ஒன்று. ஆனால் நவீன வேதி வேளாண்மை எடுத்த எடுப்பில் தனக்குத்தான் எல்லாமே தெரியும் என்று பரிசோதனைச் சாலை முடிவுகளை நூறு, ஆயிரம், பத்தாயிரம் என்று தகுந்த எண்களால் பெருக்கிக் கழனிக்குப் பரிந்துரை செய்கிறது.


"உலகில் மக்கள் தொகை பெருகி வருகிறது; விளைநிலங்கள் குறைகின்றன. எனவே குறைந்த நிலப்பரப்பில் அதிக விளைச்சலை எடுக்க வேண்டும். இதற்கு வேளாண் விஞ்ஞானமும் அதன் புதிய கண்டு பிடிப்புக்களும் இன்றியமையாதவை" என்ற கருத்து பொது ஜனங்களில் பெரும்பாலோருக்கு இருக்கிறது. உணவுப் பஞ்சம் வருவதற்கு உற்பத்தியின்மைதான் காரணம் என்ற கருத்தும் பரவலாக இருக்கிறது. எனவே 1960க்குப் பின் அமெரிக்கத் தொழில்நுட்பத் துணையுடன் இந்தியாவில் கொண்டு வரப்பட்ட "பசுமைப் புரட்சி" நம் நாட்டுக்கு நேர்ந்த மிக நல்ல விஷயங்களில் ஒன்று என்று மிகச் சிலரைத் தவிர எல்லாருமே கருதுகிறார்கள். இதன் உண்மைப் பின்னணி என்ன? பசுமைப் புரட்சி தேவைப்பட்டதா, நன்மை அளித்ததா, உணவுத் தன்னிறைவு அளித்ததா, அதற்கு முன் இருந்த விளைச்சல் எப்படிப்பட்டது, அதன் பின்னர் இருந்த விளைச்சல் எப்படி, இதற்கு நாம் விலையாகக் கொடுத்தது என்ன என்ற சரியானதொரு நடுநிலை ஆய்வு தேவைப்படுகிறது. 


இலக்கியத்தில் பட்டம் பெற முனைவோர் இலக்கிய வரலாறு பற்றிப் படிக்கிறார்கள். ஆனால் விஞ்ஞானத்தில் விற்பன்னர்களாக விழைவோர் அவரவர் விஞ்ஞானத் துறையின் வரலாறு பற்றி அதிகம் படிப்பதில்லை. வேளாண் பட்டம் பெறும் பல்கலைகழக மாணவர்கள் எனக்குத் தெரிந்து வேளாண்மையின் வரலாறு பற்றிப் படிப்பதேயில்லை - இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் புழுதி உழவு நன்றாய்ச் செய்தால் எருவின் தேவை குறையும் என்று திருக்குறள் சொல்லிய பாடம் பற்றியோ, சங்க இலக்கியங்களில் 'தாதெரு மன்றம்' என்று மக்கின் பெருமை பற்றியோ, அர்த்த சாத்திரம் போன்ற நூல்களில் கூறப்பட்டுள்ள உழவுத் தொழில்நுட்பங்களையோ, பிறை கொண்டு மழை அறிவதோ எதுவுமே தெரியாது. இன்றைக்கு எத்தனை வேளாண் விஞ்ஞானிகளால் ஒரு இருபது அல்லது முப்பது பாரம்பரிய நெல்ரகங்களின் பெயரும், வயதும், அவற்றின் தன்மைகளும் கூற இயலும்?


இருள் நிறைந்த‌ இந்த அறியாமைச் சூழலில் ஒரு நல்ல கைவிளக்கைப் போல் வந்துள்ளது திருமதி சங்கீதா ஸ்ரீராமின் "பசுமைப் புரட்சியின் கதை" என்கிற நூல். முன்னர் காலச்சுவடு பத்திரிகையில் தொடர் கட்டுரைகளாக வந்தவை தொகுக்கப்பட்டு அழகிய‌ நூல் வடிவில் அச்சாகியுள்ளது.  உபநிடதங்களில் ஆரம்பித்துத் தற்கால இலக்கியங்கள் வரை தமிழ், வடமொழி, ஆங்கிலம் என்ற மூன்று மொழிகளிலும் எண்ணற்ற மேற்கோள்களும், குறிப்புகளும் உள்ளடக்கிய இந்நூல் சங்கீதாவின் ஆழ்ந்த ஆய்வின் வியர்வையைக் காட்டுகிறது. பிரெஞ்சுப் புரட்சியை எல்லோரும் கொண்டாடிக் கொண்டிருந்த போது,  ஆங்கிலச் சிந்தனையாளர் எட்மண்ட் பர்க், "புரட்சி என்பது ஒரு நாட்டின் மருந்தாக இருக்க வேண்டும், உணவாகக் கூடாது" என்று எச்சரித்தார்.நமக்கு மருந்தென உருவகம் செய்யப் பட்ட பசுமைப் புரட்சி பின்னர் உணவாகி இன்று அதுவே நோயாகி இருப்பதை இந்நூல் அழகாகத் தூரிகையிடுகிறது.


பிரிட்டன் தன் காலனி நாடுகளில் காப்பி, தேயிலை, புகையிலை, அவுரி போன்ற‌ பணப்பயிர்களை விளைத்து அதன் உள்நாட்டு இயந்திர உற்பத்திக்கும் , வாணிபத்திற்கும் மூலப்பொருட்களை மிகக் குறைந்த செலவில் தயாரித்ததும், இதனால் இந்திய நாட்டில் எவ்வளவு சமூக, பொருளாதார இழப்புகள் ஏற்பட்டன என்றும் மிகத் நேர்த்தியாய் வரைந்திருக்கிறார்.

உணவுப்பஞ்சம் என்பது உருவாக்கப்பட்ட தட்டுப்பாடு என்றும், பசுமைப் புரட்சி கொண்டு வரப் பட்ட உட்கார‌ணங்களும், உந்துதல்களும், அதனூடே அடித்தளமாய் இழையோடிய அரசியல் மற்றும் வாணிப நோக்கங்களும் மிகத் தெளிவாய் ஆய்வுக் குறிப்புகளுடன் வெளிச்சமிடப் பட்டுள்ளன. 


"உணவுத் தற்சார்பு என்றால் உணவு உற்பத்தி செய்யத் தேவைப்படும் செயற்கை உரங்களிலும், பெட்ரோலியப் பொருட்களிலும் தன்னிறைவு அடைய வேண்டும் அல்லவா", "சர்வாதிகாரத்துக்கு வன்முறை என்றால், ஜனநாயகத்துக்குப் பிரச்சாரம்", " எல்லோருக்கும் சோறு போடும் இயற்கை விவசாயம்" என்பன போன்று பல சிந்தனைகளை முன்வைக்கிறார்.

அவருடைய எழுத்துக்களைப் படித்தால் அவரின் ஆழ்ந்த களப்பணி அனுபவமும், எப்பொருளையும் மெய்ப்பொருள் காணும் நடுநிலைச் சிந்தனையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறியுடன் விமர்சித்துள்ள துணிவும், நேர்மையும், வெளியாகின்றன.'கஞ்சி குடிப்பதற்கிலார், அதன் காரணங்கள் யாவென்னும் அறிவுமிலார்' என்று தன் சக மனிதர்களைப் பார்த்து மனம் வருந்திய பாரதியின் வலியும், கருணையும் இவரின் எழுத்தில் அடியோடுகிறது. சீராரும் வதனத்தில் திகழும் திலகமாய் எழுத்தாளர் ஜெயமோகனின் முன்னுரை உள்ளது.


பசுமைப் புரட்சியால் எந்த நன்மையும் விளையவில்லை என்று ஆதாரங்களுடன் நிரூபணம் செய்துள்ள இந்நூல் தமிழ் வேளாண் இலக்கியத்தில் ஒரு முக்கிய இடத்தைத் தக்க வைக்கும் என்பதில் ஐயமில்லை.


சில புத்தகங்களைப் படித்தவுடன் ' அடடா ஆசிரியர் நல்ல சிந்தனைவாதி' என்று தோன்றும். வேறு சில ' ஆகா! இந்த உண்மை தெரியாமல் நம்மை ஏமாற்றி விட்டார்களே' என்று கொதிக்க வைக்கும். இன்னும் சில ' உடனே இதை ஒரு பத்து பிரதி வாங்கி நண்பர்களுக்குக் கொடுக்க வேண்டும்' என்று திருமூலரைப்போல் நம் இன்பத்தைப் பகிர்ந்து கொள்ளத் தூண்டும். சில வரலாற்று ஆய்வு நூல்கள் ' இது நம் பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டிய நூல்; இதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்' என்று ஆக்கிணை இடத் தோன்றும். மிகச்சில நூல்களே இவை எல்லா உணர்வையும் ஒருமித்துப் பொங்க வைக்கும்.  சங்கீதாவின் "பசுமைப் புரட்சியின் கதை"  அந்த மிகச்சில வரிசைக்குட்பட்டது.

No comments: